கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, July 16, 2025

நாளாம் நாளாம் பிறந்த நாளாம்நாளாம்

நாளாம் நாளாம் 
பிறந்த நாளாம் 

பேத்தியின் பிறந்தநாளுக்கான அலங்காரங்கள்

பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு சிறு வயதில் ஆசைப்பட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் யாரும் வாழ்த்து கூறியதில்லை. சீனியர் சிட்டிசனாகி, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஆசை போன பிறகு முக நூல், மெசன்ஜர், வாட்ஸாப் என்று பல வழிகளில் வாழ்த்து மழை!

எங்கள் வீட்டில் பெரும்பான்மை-யோர்களின் பிறந்த நாள்கள், திருமணநாள்கள் எல்லாமே ஜுன், ஜுலையில்தான் வரும். ஆனி கொண்டாட்டம்!

இந்த வருடம் சனிக்கிழமையன்று என்னுடைய பிறந்தநாள் வந்ததால் ப்ராம்டன் என்னும் இடத்தில் இருக்கும் குருவாயூரப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று நினைத்தோம். அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில்தான் நான் நாராயணீயம் கற்றுக் கொண்டேன். எனவே குருவாயூரப்பனை தரிசிக்க விரும்பினேன். 

ப்ராம்டனில் இருக்கும் குருவாயூரப்பன் கோவில் கேரள பாணியில் அமைந்திருக்கும் சிறிய அழகான கோவில், நன்றாக பராமரிக்கப்படுகிறது. கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் பிரதானமாக குருவாயூரப்பன் சன்னதி. குருவாயூரில் இருப்பது போல குழந்தை கிருஷ்ணனாக இல்லாமல் சற்று பெரிய குழந்தையாக இருக்கிறார் அதற்கு எதிர் எதிரே துலாபாரம் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது விநாயகர் ஐயப்பன் பகவதி சன்னதிகள்.

கோவிலில் இருந்து ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றோம் அங்கிருந்து அவர்கள் குடும்பத்தோடு நயாகரா சென்றுவிட்டு, அங்கிருந்து நயாகரா பை தி லேக்ஸ் ஒரு பெரிய ஏரியை ஒட்டி இருக்கும் பார்க்கிற்கு சென்றோம். அந்த பார்க்கிலிருந்து பார்க்கும் பொழுது ஒரு கட்டிடம் தெரிந்தது அது அமெரிக்காவை சேர்ந்ததாம் ஒருமுறை அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் யுத்தம் வந்த பொழுது அமெரிக்க துருப்புகள் அந்த கட்டிடத்தில் இருந்தும் கெனடிய துருப்புகள் அருகில் இருக்கும் மிசிசாக போர்ட் என்னும் இடத்தில் இருந்தும் யுத்தம் செய்தனவாம்.


 


அதற்கு அருகில் குயின்ஸ் ஸ்ட்ரீட் என்ற ஒரு இடம் அது பழங்கால கனடா. தெருவின் இரண்டு புறங்களிலும் வரிசையாக கடைகள் அவைகளை பார்வையிட்டோம் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம் ஆனால் எனக்குத் தான் கடுமையான தலைவலி இவர்கள் என்னதான் கோடை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் இத்தனை நாட்களாக எனக்கு கோடை போல தோன்றவில்லை. வீட்டிற்குள் ஏசி ஓடிக் கொண்டிருந்ததால் நான் வெப்பத்தை உணரவில்லை அன்றுதான் வெளியே சென்றோம் பளிச்சென்று வெயில் இத்தனை நாட்களாக குளிர் குளிர் என்று சொல்லிக் கொண்டிருந்துவிட்டு திடீரென்று வெயிலுக்கு எக்ஸ்போஸ் ஆனதில் ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது கடுமையான தலைவலி வந்துவிட்டது அதனால் நாங்கள் சீக்கிரம் நண்பர் வீட்டிற்கு வந்து விட்டோம் அங்கு வந்ததும் இரண்டு பாரசிட்டமால் போட்டுக் கொண்டேன். அதனால் புகைப்படம் எடுக்க மூட் இல்லை.

குயின்ஸ் ஸ்ட்ரீட்டில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகள் இருந்தன குதிரை என்றால் அதுதான் குதிரை, நமீதா போல. எலும்பும்,தோலுமாக இருக்கும் நம்ம ஊர் சோப்ளாங்கி குதிரைகளை பார்த்துவிட்டு அந்த குதிரைகளை பார்த்தால் வியப்பாக இருந்தது.

அங்கிருந்து நண்பர் வீட்டிற்கு வரும் வழி முழுவதும் திராட்சை தோட்டங்கள் மற்றும் ஒயின் தயாரிக்கும் கூடங்கள் நயாகரா ஒயின் மிகவும் பிரசித்தி பெற்றதாம் அங்கு இருக்கும் ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளை சுற்றிப் பார்ப்பதையே ஒரு டூராக அரேஞ்ச் பண்ணி தருவார்களாம் அந்த சமயத்தில் ஒயினை சுவைத்துப் பார்க்கலாமாம். 

என் பிறந்தநாளுக்கு என் மகள் மேங்கோ கோக்கனட் பை செய்திருந்தாள், நன்றாக இருந்தது. ஒரு திங்கள் அன்று பகிர எண்ணி இருக்கிறேன். இரண்டு பேத்திகளும் அவர்களாகவே பர்த்டே கார்டு வரைந்து கொடுத்தார்கள். சர்ப்ரைஸாக எனக்கு தர வேண்டும் என்பதால் அவர்கள் அதை தயாரிக்கும் வரை என்னை ஹாலுக்கு வர விடவில்லை:))

கூகுள் உதவியோடு தமிழிலும் வாழ்த்து :))

அடுத்த நாள் சாயிபஜனைக்கு சென்று விட்டு வரும் பொழுது சங்கீதாவிற்கு நான் அவர்களை அழைத்துச் சென்றேன். சாப்பாடு நன்றாக இருந்தது அதை பரிமாறிய தமிழ் பேசிய இரண்டு இளம் பெண்களும் நன்றாக இருந்தார்கள் கல்லூரி மாணவிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

இப்படியாக என் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது பேத்திக்கு ஜூலை 15 பிறந்தநாள் அன்று ஒர்க்கிங் டேயாக இருப்பதால் சனிக்கிழமை அதாவது ஜூலை 12 அவை அவளுக்கு நெருக்கமான சில தோழிகளை அழைத்திருந்தாள். மகள் விருப்பப்படி வீட்டில் என் மகள் செய்த டபுள் லேயர் கேக் கட் பண்ணினார்கள். பலூன் அலங்காரம் எல்லாம் என் மகளேதான் செய்திருந்தாள்.

பர்த் டே தீம் வாட்டர். அதனால் அவள் தன் தோழிகளோடு பக்கத்தில் இருந்த splash padல் விளையாடி விட்டு வந்தனர். கேக் கூட நீல நிறத்தில் வேண்டுமென்றாள். குழந்தைகளுக்கு கேக்கோடு சிப்ஸ் ஜூஸ் பீட்சா, வெஜிடபிள் சாலட் வித் ராஞ்ச் போன்றவை வழங்கப்பட்டன. தனக்கு பரிசாக வந்த லேகோ பிளாக்ஸ்களை வைத்து என் பேத்தி செய்திருந்த மயில்.


மயிலாசனம் - ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மயில்

Tuesday, June 24, 2025

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் (Wutai Shan Buddhist Garden) - Part 2

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் 

(Wutai Shan Buddhist Garden) - Part 2


North Platform, South Platform, East Platform என்று வெவ்வேறு இடங்களில் பெரிய பெரிய மஞ்சுஸ்ரீ போதிஸ்ட்துவர்களின் சிலைகள். ஒண்று கையில் சுவடி ஏந்தி, இன்னொன்று சிம்ம வாகனத்தில் கையில் வாள் ஏந்தி, மற்றொன்று கையில் வில்லும் அம்பும் ஏந்தி, நமக்கு சரஸ்வதி, துர்கையை நினைவு படுத்தினாலும் இவர்கள் அந்த போதிசத்துவர்கள் எல்லாம் ஆண்கள் என்கிறார்கள்.

முதல் படத்தில் ஏறிச் செல்ல படிகள் இன்னும் கட்டப்படவில்லை


அந்த சிலைகளின் பிரும்மாண்டம், அழகு, முகத்தில் தவழும் கருணை.. அப்பப்பா..! பார்க்க பார்க்க மனசுக்குள் ஒரு விவரிக்க இயலாத அமைதி பிறக்கிறது. எல்லாமே கொஞ்சம் படிகள் ஏறித்தான் தரிசிக்க வேண்டும்.

எல்லா போதிசத்துவர்கள் முன்னாலும் வெண்ணிற சலவைக் கற்கள். அதில் முழங்கால் பட அமர்ந்து பீரார்திக்க வேண்டும். செருப்பு அணிந்திருக்கலாம். கீழே இருக்கூம் படத்தில் பிரார்த்தனை செய்யும் பெண்.

 


நடுவில் மத்திய பிரார்த்தனை கூடம் என்பதில் மூன்று பிரும்மாண்ட புத்தர் சிலைகள் பொன் மேனியராக, கருணை தவழும் முகத்தோடு அமரந்த கோலத்தில் பார்க்க முடிகிறது. மூன்று புத்தர்களும் கையில் வெவ்வேறு பொருள்களை ஏந்தியிருக்கின்றனர். 





அதைத்தவிர அந்த கூடத்தை சுற்றி வரும்பொழுது நிறைய புத்தர் சிலைகள், எல்லாம் வெவ்வேறு முத்திரைகள். பக்தர்கள் தட்டு தட்டாக பழங்கள், பூங்கொத்துகளை காணிக்கையாக படைத்திருக்கிறார்கள். அவற்றை அங்கேயே விற்பனை செய்கிறார்கள். இது அமைந்திருப்பது முதல் தளத்தில். 

இங்கே புத்தரை தரிசனம் செய்யும் பொழுது மணி ஒசை கேட்டுக் கொண்டே இருந்தது. கீழே இறங்கியதும் அந்த மணி ஓசை எங்கிருந்து வருகிறது என்பது தெரிந்தது.







கீழே அமர்ந்திருக்கும் புத்தருக்கு மேலே மரத்தடியில் அமர்ந்திருக்கும் வயதான புத்தருக்கு பழங்கள் கொண்டு தரும் விலங்குகளும், தேவதைகளும்

கீழ் தளத்தில் உணவு விடுதி இருக்கிறது. அங்கே நாங்கள் மல்லிகை டீ குடித்ததை ஏற்கனவே எழுதி விட்டேன். இங்கேயும் மத்தியில் ஒரு பெரிய ஹாலில் புத்தரின் வாழ்க்கையை விளக்கும் விக்கிரகங்கள். அந்த ஹாலின் சுவர் முழுவதும் வரிசையாக மரசட்டத்தில் புத்தர் படங்கள். அவை பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அது நிறைவேறியதும் வாங்கி மாட்டுவதாம். 


இதற்கும் கீழே கார் பார்க்கிங். அங்கு ஒரு ஓரத்தில் பெரிய மணி ஒன்று இருக்கிறது. நாம் ஏதாவது நடக்க வேண்டுமென்று நினைத்தால், அந்த  விருப்பம் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த மணியை அடித்தால் நாம் ஆசைப்பட்டது நடக்குமாம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவரின் கோவிலில் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று இடைவிடாமல் மணி ஒலிக்கிறது. :))



விஸ்டம் லேக் தாண்டி தொலைவில் தெரிவது விஷ் ஃபுல்ஃபில்லிங் செவன் பகோடாஸ்


ஒரு போதிசத்துவரின் சன்னதியைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபங்களில் ஒன்று. இவை ஞான பாதையில் புத்தருக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் அவருடைய போதனைகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, அங்கேயே கையோடு கொண்டு போயிருந்த உணவை சாப்பிட்டோம். பின்னர் கீழே இறங்கி, விஸ்டம் லேக், லைஃப் லிபரேஷன் பாண்ட், விஷ் ஃபுல்ஃபில்லிங் செவென் பகோடாஸ் முதலியவற்றை பார்த்துவிட்டு, வீடு திரும்பினோம். 

நாங்கள் சென்ற அன்று நல்ல குளிர், கோடையில் ஒரு நாள் செல்ல வேண்டும்.

Monday, June 9, 2025

உடாய் ஷான் புத்தியிஸ்ட் கார்டன்(Wutai Shan Buddhist Garden)

உடாய் ஷான் புத்தியிஸ்ட் கார்டன்(Wutai Shan Buddhist Garden)


மைத்ரேய புத்தா:

என் மகள் வீட்டிலிருந்து அரைமணி நேர டிரைவ் தொலைவில் ஒரு புத்தர் கோயில் புதிதாக வந்திருக்கிறது, அங்கு செல்லலாம் என்று என் மகளின் குடும்ப நண்பர் கூறினார். சென்ற மாதம் வந்த லாங் வீக் எண்டில் போக நினைத்தோம். ஆனால் மழை எங்கள் திட்டத்தை நிறைவேற்ற விடவில்லை.  சென்ற வாரம் சனியன்று அங்கு போக திட்டமிட்டோம். மழை இல்லை, ஆனால் மேக மூட்டம் மற்றும் காற்று.. நல்ல குளிர்.

நுழை வாயில்

நாம் புத்தர் கோவில் என்று சொன்னாலும், அதை Wutai Shan Buddhist garden  என்கிறார்கள். 350 ஏக்கரில் விரிந்து பரந்திருக்கும் இந்த இடத்தை North Platform Manjusri Bodhisattva, West Platform Manjusri Bodhisattva, Central Platform Manjusri Bodhisttva, South Platform Manjusri Bodhisttva, East Platform Manjusri Bodhisttva ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள்.   

நுழைவு வாயிலின் இரு புறங்களிலும் பக்கத்திற்கு 14 என்று மொத்தம் 28 தூண்கள் அல்லது ஸ்தூபங்கள் உள்ளன. அவற்றை wish fulfilling stoopas என்கிறார்கள். அங்கிருந்து வலது பக்கத்தில் கார் பார்கிங்க்.  வண்டிகளை நிறுத்தி விட்டு, முதலில் பிருமாண்டமான ஹாப்பி புத்தாவை( laughing Buddha)  தரிசிக்கச் சென்றோம். அவரை மைத்ரேய புத்தா என்கிறார்கள்.

பதிமூன்று அடி உயரத்தில், 700 டன் எடையுள்ள (தலை மட்டுமே 27 டன்னாம்) ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த மைத்ரேய புத்தா சிலைதான் வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சிலையாம். இது இங்கு நிறுவப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.

கனடா புத்த விஹார தலவரான டாய் ஷி(Dayi Shi) 2009 ஆம் ஆண்டின் கோடையில் ஒரு நாள் அப்பொழுது உருவாகிக் கொண்டிருந்த உடாய் ஷான் தோட்டத்தை பார்வையிட்டுவிட்டு, அவர் இருந்த சாம் ஷான் புத்தர் கோவிலுக்கு திரும்பியவுடன் அசதியில் உறங்கி விட்டார். உறக்கத்தில் ஒரு கனவு. "எத்தனையோ போதிசத்துவர்கள் இருக்க, நாலு போதிசத்துவர்களுக்கு மட்டும்தான் கோவிலில் இடமா? மைத்ரேய போதிசத்துவர் என்ன ஆனார்?" என்று குரல் கேட்டது, அதோடு மைத்ரேய புத்தரின் உருவ சிலையும் தெரிந்தது. விழித்துக் கொண்டு விட்டார். உடனே மைத்ரேய போதிசத்துவரின் சிலையை உடாய் ஷான் தோட்டத்தில் நிறுவ முடிவு செய்தார். 

அந்த தோட்டத்தின் விஸ்தீரணத்திற்கு ஏற்ப பிருமாண்ட சிலையை நிறுவினால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.  ஆனால் அதில் இரண்டு பிரச்சனைகள் இருந்தன. ஒன்று அவர் விரும்பியபடி சிலை அமைக்கத் தேவையான நிதி, இரண்டாவது அந்த சிலையின் உருவ அமைப்பு. அவர் முடிவு செய்த இரண்டாவது நாளே ஹாங்காங்கிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த ஷெங்க் என்னும் பக்தர் சிலைக்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

அடுத்ததாக சிலையின் உருவ அமைப்பு குறித்து அவருடைய தேடல் துவங்கியது. அவர் பார்த்த எந்த சிலையும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அப்போது சைனாவிலிருந்து வந்த ஒருவர் தன்னிடம் மைத்ரேய புத்தரின் வெண்கல சிலை ஒன்று இருப்பதாகவும் அதை டாய் வந்து பார்க்கலாம் என்றும் கூறினார். சைனா சென்று பார்த்த டாய் அவர்களுக்கு ஆச்சர்யம். ஏனென்றால் அவருடைய கனவில் வந்த ஒருவத்தை அப்படியே ஒத்திருந்தது அந்த சிலை.  அந்த சிலையை அடிப்படையாகக் கொண்டே உடாய் ஷான் தோட்டத்து சிலை வடிக்கப்பட்டது.

மைத்ரேய புத்தரின் அமைப்பை பார்க்கலாம்: அவருடைய தோள்வரை தொங்கும் நீண்ட காது அளப்பறிய ஆசிர்வாதத்தை குறிக்கிறது, அவருடைய பருத்த தொந்தி வளமையையும், கருணையையும் குறிகிறது. வலது முழங்காலை தொட்டுக் கொண்டிருக்கும் வலது கையில் ஜப மாலையும், இடது கையில் ஒரு மூட்டை நிறைய ஆசிகளையும் வைத்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் அறுகோண ஆசனம் போதிசத்துவராக மாற கைகொள்ள வேண்டிய ஆறு பயிற்ச்சிகளை குறிக்கிறாதாம். அறுகோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் முக்தியடைந்த புத்தமதம் புகட்டும் நெறிகளை கடைபிடித்து முக்தி அடைந்த ஐநூறு மகாங்களின் உருவங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. 

மைத்ரேய புத்தருக்கு எதிரே தரையில் மூன்று பெரிய சதுரக் கற்கள் சற்றே சாய்ந்த வாக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது. 'இதன் மீது கால் வைக்காதீர்கள்' என்ற அறிவிப்பு. அதில் முழங்கால் படிய அமர்ந்து பிரார்த்த்னை செய்ய வேண்டுமாம். அங்கிருக்கும் ஒரு கடையில் பிரார்த்தனை பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதி முக்கியமானது விஷ்ஷிங்க் கார்ட்ஸ் என்பவை. 

Wishing cards

கட்டப்பட்டிருக்கும் கோரிக்கை அட்டைகள்

இந்த விஷ்ஷிங் கார்ட்ஸில்(wishing cards) நம்முடைய கோரிக்கைகளை எழுதி, அதை மைத்ரேய புத்தருக்கு முன் இருக்கும் சதுர கல்லில் வைத்து பிரார்த்தித்து, பின்னர் மைத்ரேய புத்தரை மூன்று முறை வலம் வந்து அங்கு சுற்றியிருக்கும் கம்பியில் கட்டி விட வேண்டும். அந்த கோவிலின் பூஜாரி ஒரு மாதத்திற்கு நமக்காக பிரார்த்தனை செய்து கொள்வாராம். நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறுமாம். 

உமாமகேஸ்வரி மேடம் படிப்பார்கள்



சிரிக்கும் புத்தருக்கு முன் சிரிக்காத நான் குளிர்  - சிரிக்க முடியவில்லை


- தொடரும் 




   

Monday, June 2, 2025

ஸ்ரீராம் பதிவுக்கு எசப்பதிவு

ஸ்ரீராம் பதிவுக்கு எசப்பதிவு 

இரண்டு வாரங்களாக ஸ்ரீராம் வியாழனன்று சாப்பாட்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் பதிவுகளை படித்ததும் நான் சாப்பிட்ட சில உணவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. 


சென்ற வாரம் சனியன்று என் மகள் அவர்களின் நண்பர் மகளுக்கு வளைகாப்பு என்று அழைத்துச் சென்றாள். வளைகாப்பு பதினோரு மணிக்கு  என்றிருந்தது. நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது பத்தரை ஆகி விட்டது. ப்ரேக்ஃபாஸ்ட் முடிந்திருக்கும் என்று நினைத்தோம். முடியவில்லை. 

ப்ரேக்ஃபாஸ்ட் ஐட்டம்கள்: கருப்பட்டி ஹல்வா, சத்துரண்டை, வெஜிடபில் ரோல், முறுக்கு, நாடா தேன்குழல், மஃப்பின்ஸ், காபி, டீ, மற்றும் மேங்கோ ஜூஸ். இவ்வளவு பண்டங்கள் இருக்கும் என்பது தெரியாமல் வீட்டில் பேகல் சாப்பிட்டு விட்டதால் ஒரு வெஜ் ரோலும், அரை கப் காபியும் மட்டும் எடுத்துக் கொண்டேன். 

வளைகாப்பு முடிந்ததும் ஒரு மணிக்கு சாப்பாடு தயார். வெள்ளை அரிசி சாதம், சிவப்பு அரிசி சாதம் இரண்டுமே இருந்தன. தால், புளிக்குழம்பு போல ஒன்று, கத்தரிக்காய் வதக்கல், ரசம், மாங்காய் சாதம், பருப்பு வடை, உளுந்து வடை, இளநீர் பாயசம்(ஒரு காலத்தில் நம்மூரில் முழங்கிய இளநீர் பாயசத்தை இப்போது காண முடிவதில்லை) உருளை சிப்ஸ், அப்பளம்(இங்கு அப்பளத்தை முழுசாக பொரித்து வைக்காமல் உடைத்து விடுகிறார்கள்). மொத்தத்தில் சுவையான விருந்து. பஃபே முறை, உணவு வைத்திருந்த டேபிளுக்கருகில் ஏகப்பட்ட கும்பல், அதனால் புகைப்படமெடுக்க முடியவில்லை.

அங்கிருந்து நேராக மிஸிஸாகா சென்று விட்டோம். அங்கு அடுத்த நாள் ராதா கல்யாணம். முதல் நாளே தீப பிரதிஷ்டை செய்து, சில அஷ்டபதிகளை பாடி விடுவார்கள். நாங்கள் சென்ற போது பஜனை துவங்கவில்லை. வந்தவர்களுக்கு இரண்டு சமோஸா, டீ வழங்கிக் கொண்டிருந்தார்கள். நான் டீ மட்டும் எடுத்துக் கொண்டேன். பஜனை முடிந்ததும் ரெண்டு சப்பாத்தி, சப்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. 

கனடாவில்தான் இருக்கிறோமா? மேற்கு மாம்பலம் வந்து விட்டோமா? என்று சந்தேகமாக இருந்தது. அவ்வளவு மாமாக்கள், மாமிகள். பட்டுப்பாவாடை சட்டையில் பெண் குழந்தைகள், ஒட்டிக்கோ,கட்டிக்கோ வேஷ்டியில் ஆண் குழந்தைகள். தமிழ் பேச்சு. மறுநாள் பெரும்பாலான பெண்மணிகள் மடிசாரில் வந்திருந்தார்கள்.


ராதா கல்யாணத்திற்காக பருப்புத் தேங்காய், முறுக்கு, அதிரசம், மைசூர்பாக், திரட்டுப்பால் என்று பட்சணங்கள், மாப்பிள்ளை கிருஷ்ணனுக்கும், மணமகள் ராதைக்கும் வேஷ்டி,புடவைகள் வந்து குவிந்திருந்தன. அந்த சீர் சகையறாக்களை பெண்கள் processions போலகொண்டு சென்றது பார்க்க நன்றாக இருந்தது.

நான் சிறு வயதில் பார்த்த ராதா, சீதா கல்யாண உற்சவங்களில் முழுக்க முழுக்க ஆண்கள்தான் பங்கேற்பார்கள். இங்கு பெண்களும் பங்கேற்றார்கள். முத்து குத்துவது கூட பெண்களும் செய்தார்கள்.

காலையில் இரண்டு இட்லி, சாம்பார், சட்னி, காபி, டீ இருந்தது. இட்லி தீர்ந்ததும் குக்கீஸ், 1/2 வாழைப்பழம், காபி, டீ என்று வைத்து விட்டார்கள். காபி கடையில் சத்தம் அதிகம் இருந்ததால் அது பஜனை பாடுபவர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் காபி ஜக்கை ஹாலுக்கு வெளியே வைத்து விட்டார்கள். லன்ச் - சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு கறி, சிப்ஸ், தயிர் சாதம் ஊறுகாய் என்று சிம்பிள் மெனு. கும்பல் அதிகம் என்று நினைத்ததாலோ என்னவோ, சாம்பார் சாதத்தையும், தயிர் சாதத்தையும் அளந்து ஸ்பூன் அளவிற்கு போட்டார்கள். எனக்கிருந்த பசியில் வெட்கத்தை விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பட்சணங்களை கொஞ்சம் கவரில் போட்டு எல்லோருக்கும் தந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது, சம்ப்ரதாய பஜனை பாடல்களில் இத்தனை பாடல்கள் எனக்கு நினைவில் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

இரண்டு நாட்கள் முன்பு என் பேத்திகள் 'ஸ்லஷ்' குடிக்க வேண்டும் என்றார்கள். நானும் ஒன்று வாங்கிக் கொண்டேன். ஸ்லஷ் என்பது வேறு ஒன்றும் இல்லை, நம் ஊரில் ஐஸ் கோலா என்று துருவிய ஐஸில் வெவ்வேறு ஃப்ளேவர்களில் சர்பத்தை ஊற்றித் தருவார்களே அதுதான். குச்சிக்கு பதிலாக டம்ப்ளரில் வெவ்வேறு ஜுஸ்கள் கலந்த ஐஸ் துருவலை பிடித்து ஸ்டாரா போட்டு உறிஞ்ச வேண்டியதுதான். 

நேற்று அருகிலிருக்கும் புத்தர் கோவிலுக்குச் சென்றோம். அங்கிருந்த உணவகத்தில் தாமரை மொக்கு போலிருந்த பீச் மூஸ்கேக், ஸ்டாராபெர்ரி ரோல் கேக், சாக்லேட் கேக், என்று ஆர்டர் செய்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். 


அங்கிருந்த ஒரு கடையில் விதம்விதமான தேயிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ஜாஸ்மின் டீ என்று ஒன்றை எங்களை முகர்ந்து பார்க்கச் சொன்னாள். பின்னர் எங்கள் எல்லோரையும் உபசரித்து உட்கார வைத்து பாலில்லா ஜாஸ்மின் டீ தயாரித்து எங்களுக்கெல்லாம் ஒரு சிறிய கப்பில் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொன்னாள். கொஞ்சமாக குடிக்கலாம். அவள் டீ தயாரித்த விதம் நளினமான நடன அசைவுகளைப் போல வசீகரமாக இருந்தது. சுவையான டீ தயாரிக்க வேண்டுமானால் தண்ணீரை 90°Cக்கு சூடாக்க வேண்டும். Not 100°C என்றாள். 

எங்களோடு வந்தவர் ஜாஸ்மின் டீ வாங்கிக் கொண்டார்.  அவர் காபியோ டீயோ குடிக்க மாட்டார், ஒருவேளை வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பாரோ என்னவோ.




Friday, May 16, 2025

மேப்பில் சிரப் ஃபெஸ்டிவெல்

மேப்பல் சிரப் உற்சவம்(Maple Syrup Festivel)

கனடாவின் தேசிய மரம் மேப்பில் மரம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.  ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் பால் எடுப்பதை போல மேப்பில் மரத்திலிருந்து கிடைக்கும் தேன் போன்ற இனிமையான திரவத்தை(Maple Syrup)எடுப்பார்கள்.

குளிர் குறைந்து, வசந்தம் துவங்கும் காலம்தான் மேப்பில் சிரப் எடுக்க உகந்த காலம். பனி உறையாத இரவுகள், மிதமான உஷ்ண பகல்கள், அதனால் பனி உருகத் தொடங்கி விடும் காலத்தில்தான் மேப்பில் திரவத்தை மரத்திலிருந்து எடுப்பது சுலபமாக இருக்குமாம். அப்படி சேகரித்த சிரப்பை கொதிக்க வைத்து அதிலிருக்கும் நீர் ஆவியானதும் பாட்டிலில்களில் சேகரித்து வைப்பார்களாம். இதன் அறுவடைக் காலம் நான்கு வாரங்களிலிருந்து ஆறு வாரங்கள் வரை நீடிக்குமாம். அந்த காலத்தில் ஒவ்வொரு மரத்திலிருந்தும் பத்து காலன் வரை மேப்பில் சிரப் கிடைக்கலாம். இது அந்த வருடம் நிலவும் சீதோஷ்ணம், மண் மற்றும் மரத்தின் வளத்தை பொருத்து மாறலாம்.





மேப்பில் சிரப்பில் முக்கி எடுக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் வாரம் முதல் மே முதல் வாரம் வரை வெவ்வேறு இடங்களில் மேப்பில் சிரப் ஃபெஸ்டிவல் கொண்டாடுகிறார்கள். அன்று நகரின் பிரதான சாலை ஒன்றை வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்து சாலையின் இரு புறங்களிலும் சிறு வியாபாரிகள் தங்கள் பொருள்களை கடை பரப்பியிருக்கிறார்கள். மேப்பில் சிரப்பில் செய்த உணவு பண்டங்கள் தவிர அணிகலங்கள், உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், முக ஓவியம்(face painting) என்று பல வித கடைகள். இதற்கு நுழைவு கட்டணமும் கிடையாது, வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் கிடையாது என்பது கூடுதல் கவர்ச்சி.  காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும். 

மேப்பில் சிரப் லாலி பாப்


செவிக்கும் உணவு


மர பொம்மைகள்

பறவை வீடுகள்